நுவரெலியா மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில், பல கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு திரவ பால் உற்பத்தியில் சுமார் 33 வீதம் மத்திய மாகாணத்தில் இருந்து பெறப்படுகிறது. இதில் 12 வீதம் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கால்நடைகளிடையே அம்மை நோய் பரவி வருவதன் காரணமாக பாதிக்கப்பட்ட பசு மாடுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் நாளாந்த பால் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பசு மாடுகளுக்கு பரவும் அம்மை நோயை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமெனவும், சுகாதார அமைச்சிடம் தடுப்பூசி இல்லாததன் காரணமாக நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.