பிடியாணை கோரிக்கை “மரணதண்டனை விதிப்பதற்கு சமம்”: நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக போர்க்குற்றம் தொடர்பில் பிடியானை பிறப்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி கரீம் ஏஏ கான் கேசி நேற்று திங்கட்கிழமை (20) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

அத்துடன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைமைகளான முகமது தியாப் இப்ராஹிம் அல் மஸ்ரி, ஹமாஸின் இராணுவப் பிரிவின் தளபதி உள்ளிட்ட சிலருக்கு எதிராகவும் பிடியானை பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்து மனிதர்களின் உயிர்களும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கோரிக்கை விடுத்ததாக சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெதன்யாகு தனக்கு எதிரான சட்டத்தரணியின் குற்றச்சாட்டுகளை “அவமானம்” என்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை “மூர்க்கத்தனமானது” என பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் எதுவித சமத்துவமும் இல்லையென தெரிவித்த பைடன் பிடியாணை கோரிக்கை “மரணதண்டனை விதிப்பதற்கு சமம்” என தெரிவித்துள்ளார்.

இந்த நீதிமன்ற நடவடிக்கை காசா மோதலை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பும் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு கண்டனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்டத்தரணியின் கோரிக்கை மற்றும் சாட்சியங்களை பரிசீலித்து இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin