கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த பாடசாலை மாணவிகள் 12,14,10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் , மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வெலவாலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் வழக்குகள்
உயர் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 20,075 ஆகும்.
இவற்றில் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,495. மற்றும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12,580 ஆகும்.
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,751 முறைப்பாடுகள் பொலிஸ் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் 9,436 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இரண்டு வருடங்களிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் 1,174 முறைப்பாடுகளும் இந்த வருடம் இதுவரை 293 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், இவ்வருடம் இதுவரையில் 538 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதுடன் கடந்த வருடம் 1612 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தகவல்கள் நேற்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.