மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் இருந்து வெளி வரும் லங்காதீப நாளிதழின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காண்பித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன் தினம் (09) உத்தியோகப்பூர்வமாகஅறிவித்தது.
அதன் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடையில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் வேட்பாளரை அறிவிப்பதில் அவசரமில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜுன் மாதம் 16 ஆம் திகதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜுன் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது சிறந்ததாக அமையும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.