உக்ரைன் – ரஷ்ய போரில் மேலும் 14 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் உக்ரைன் – ரஷ்ய போரில் கூலிப்படையாக செயற்படுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
போலியான வாக்குறுதிகள் மூலம் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் போர் களத்தில் கூலிப்படையாக ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் சுமார் எட்டு இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, மேலும் 14 இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறித்த அதிகாரியை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இலங்கையர்களை மோசடியான முறையில் அழைததுச் சென்ற மற்றுமொரு முகவரும் மாவனெல்லையில் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் சிக்கியவர்களின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இலங்கை படையின் ஓய்வுபெற்ற ஒன்பது இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் (ஆட்கடத்தல்) ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் போருக்கு இலங்கையர்களை சட்டவிரோதமாக அனுப்பியமை தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட பிரிவை நிறுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.