ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் நேற்று பிற்பகல் (19) இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை அவதானித்து வருவதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி தனது அரசியல் கலாச்சாரம் ஆரம்பத்திலிருந்தே நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்தியது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் பூரண ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கிப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் பேட்ரிக் மெக்கார்த்தி, சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர் நெத்மினி மடவல, தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.