பாரிய நட்டத்தின் மத்தியில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த 10 வருடங்களில் அதாவது 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டு வரையில் சுமார் 458247 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, 2014-2015ஆம் ஆண்டுகளில் 16330 மில்லியன் 2015-2016ஆம் ஆண்டில் 12084 மில்லியன்

2016-2017ஆம் ஆண்டுகளில் 28340 மில்லியன்,

2017-2018ஆம் ஆண்டுகளில் 18585 மில்லியன்,

2018-2019ஆம் ஆண்டுகளில் 41700 மில்லியன்,

2019-2020ஆம் ஆண்டுகளில் 44139 மில்லியன்,

2020-2021ஆம் ஆண்டுகளில் 49705 மில்லியன்,

2021-2022ஆம் ஆண்டுகளில் 163583 மில்லியன்,

2022-2023ஆம் ஆண்டுகளில் 71307 மில்லியன்,

2023-2024ஆம் ஆண்டுகளில் 12472 மில்லியன், ரூபாயும் நட்டமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மக்களுக்கு அசௌகரியமின்றி சேவைகளை வழங்க பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மறுசீரமைப்பு அவசியம்

இந்நிலையில், மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியுமென, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை மட்டுமன்றி உலகில் செல்வந்த நாடுகளில் கூட, விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சில நாடுகள் அந்த நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதி வழங்குவதாகவும் இலங்கையால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

ஊழியர்கள் பற்றாக்குறை

விமான சேவை ஊழியர்கள் 470 பேர், ஒரே தடவையில் தமது பதவியை இராஜினாமா செய்ததாலேயே 791 பேரை புதிதாக இணைக்க நேர்ந்ததென்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

‘ உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன. இந்திய எயார் லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நட்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது.

இலங்கையால் நிதி வழங்க முடியாது

எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 02 அல்லது 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது.

அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கியே ஆக வேண்டும்.

நட்டத்திற்கு காரணம்

விமானம் கொள்வனவு செய்வதற்கும் எம்மிடம் நிதி கிடையாது. இதற்காக முதலீடு செய்யும் நிலையிலுமில்லை. குத்தகை அடிப்படையிலேயே விமானங்களை பெற்றுக் கொள்கிறோம். ஒரு விமானம் கூட எமக்கு சொந்தமானதாக இல்லை. அனைத்து விமானங்களும் லீசிங் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு லீசிங் வழங்கிய பின்னர் எத்தகைய நிதியும் எமக்கு மிஞ்சாது.

அண்மைக் காலங்களில் விமான சேவை தொடர்பில் பல தொழிற்சங்க நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேர்ந்தது. இதுவும் நட்டத்திற்கு காரணமாகிறது.

இதனால்தான், மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது. ‘ என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin