பொருளாதார நீதியை அடையவதற்காக நாளை (09) முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொழிநுட்ப அறிக்கைக்கு அமைய கொடுப்பனவுகளை வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக பொருளாதார நீதிக்கான 4 மாதகாலப் போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், நேற்றைய தினம் கூடிய தொழிற்சங்க பிரதிநிதிகளினால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களின் பணியாளர்கள் கடமையில் இருந்து விலகிச் செயற்படவுள்ளனர்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு கிடைக்காத நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மாகாணம் முழுவதும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தீர்மானிக்கக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை வடமத்திய மாகாணத்திலும், எதிர்வரும் 13 ஆம் திகதி மத்திய மாகாணத்திலும், 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் தென் மாகாணத்தில் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.