குற்றச்சாட்டுகளை கோட்டாபய ராஜபக்‌ஷவினால் மறுக்க முடியாது: கர்தினால்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2021 ஆம் ஆண்டு தம்முடன் தொலைபேசியில் உரையாசிய போது கூறிய விடயங்களை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது எனவும், ஏனெனில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி தம்முடன் தொலைபேசியில் உறையாடினார் என்பதனை தாமும் தமது செயலாளரும் நிருபிக்க முடியும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த பேராயர் கர்தினால் ;

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய மட்டுமே பரிந்துரை செய்துள்ளதாக கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் கூறியிருந்தார்.

இருப்பினும், இஸ்லாமியர் அல்லாத ஒரு அமைப்பையும் தடை செய்யுமாறு அறிக்கை தெளிவாக பரிந்துரைத்துள்ளது. இந்த உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மறுக்க முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இடமாற்றம் செய்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: admin