மலையக மக்களுக்கு காணி உரிமை

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்கு திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று இடம்பெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”கடந்த நான்கு வருடங்களாக இதற்காகதான் காத்திருந்தேன். இ.தொ.காவின் பலம் என்ன என்பதை காட்டவே காத்திருந்தேன்.

ஆறுமுகன் தொண்டமான் மறைந்தப் பின்னர் மேதினத்தை செய்ய முடியாது போனது. கொரோனா தொற்று பரவியது. பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். கண்ட கண்டவர்கள் எல்லாம் இ.தொ.கா முடிந்துவிட்டதா என கேள்விகேட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் பதவியையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சு ஒன்றையும் பெற்றுள்ளோம். இன்று மலையகத்தில் பலமான தொழிற்சங்கமாக இ.தொ.கா உள்ளது.

30 நாளில் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பரா ஜீவன் தொண்டமான் என்றனர். 30 நாட்களில் சம்பள நிர்ணய சபையை கூட்டினோம். கூறியபடியே 1700 ரூபா சம்பளத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

சௌமியமூர்த்தி தொண்டமான் வழியிலா ஆறுமுகன் தொண்டமான் வழியிலா அல்லது செந்தில் தொண்டமான் வழியிலா அல்லது எமது ஏனைய தலைவர் வழியிலா அரசியலை செய்வதென்று எனக்குள் ஒரு கேள்வி இருந்தது.

எனது பெயர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான். கட்டாயம் மலையக மக்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். அது எம்மால்தான் பிறக்கும். எதிர்வரும் 29ஆம் திகதிமுதல் காணி உரிமையை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது” என்றார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார இன்று புதன்கிழமை வெளியிட்டதுடன், இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கொட்டகலையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin