ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையானது இன்றைய அரசியல் செய்திகளில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனவை உருவாக்கியதன் மூலம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தவர்கள் ராஜபக்ஷ குடும்பம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றை பலர் மறந்துவிட்டனர் எனவும், மத்திரிபால சிறிசேன பற்றியே இன்னும் பேசப்படுவதாகவும் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் மௌபிம என்ற சிங்கள நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
நெருக்கடிக்கு யார் காரணம்?
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான மௌபிம நாளிதழில் இலங்கை அரசியல் தொடர்பான அரசியல் பத்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்காவினாலா அல்லது மைத்திரியினாலா என்பதே இப்போதைய பேசுபொருளாக காணப்படுகின்றது.
இருப்பினும், முன்னதாக இதேபோன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினதா அல்லது மஹிந்த ராஜபக்ஷவினுடையதா என்ற சிக்கலும் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சந்திரிக்காவுக்கு ஆதரவாக மைத்திரி நின்றார். இதன் அடிப்படையிலே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெற்றிபெறுவதற்கு சந்திரிக்கா உறுதுணை புரிந்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இழந்த மஹிந்த ராஜபக்ஷ கட்சியை இல்லாதொழிக்க மிகவும் திட்டமிட்டு உழைத்த நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அந்தப் பொறியில் இருந்து தப்பிக்க முடியவில்லை என அந்தப் பத்தி எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதவிப் போட்டிகள்
இந்த பின்னணியிலே, தலைமை பதவி சர்ச்சை, தவிசாளர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் நாட்டின் பல தலைமைகளை உருவாக்கிய மிக முக்கிய கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பிளவுபட்டு நிற்கிறது.
இந்த நிலையில், மைத்திரி தரப்பு திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அவர்களின் பல நிலைப்பாடுகள் சட்டத்திற்கு முரணானதாகவே காணப்படுகின்றன.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் நீடிக்குமாயின் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல் நிலை உருவாகலாம் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்தாக இருக்கின்றது.
ஆதரவாளர்களின் நிலைமை என்ன?
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காலத்திற்கு காலம் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், இந்தளவு பிளவுபட்டது இல்லை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக காணப்படுகின்றது.
ஆகவே, எதிர்காலத்தில் பிரதான கட்சிகள் பிளவுபடுவதற்கும், உடைந்த கட்சிகள் ஒன்றிணைவதற்கும், பல கட்சிகள் காலான் போல் உருவாவதற்குமான சாத்தியப்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன.
இந்த பின்னணியில் இவர்களை ஆதரிக்கும் ஆதரவாளர்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளதாக அப் பத்தி எழுத்தில் மேலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.