இலங்கையில் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் வெவ்வேறான காரணங்களுக்காக இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவு பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கனேபொல தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்கள் உட்பட ஏனைய சமூக காரணங்களும் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் வருடாந்த இறப்பு வீதமும் குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
‘பொதுவாக நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 140,000 மட்டத்தில் காணப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக அதிகரித்துள்ளது.
குழந்தை பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் நாட்டில் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை 325,000 ஆகும்.
அந்த எண்ணிக்கை தற்போது 280,000ஆக குறைவடைந்துள்ளது.‘ என தெரிவித்தார்.
இந்நிலையில் பொருளாதார சிக்கல்கள் காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை, உளச்சிக்கல்கள் அதிகரிக்கின்றமை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக குழந்தை பிறப்பில் பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் விருப்பமின்மையும் இந்த குழந்தை பிறப்பு வீதம் குறைவடைய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.