எல்ல – வெல்லவாய வீதியில் மண்சரிவு அபாயம்

எல்ல – வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவுகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரிவான ஆய்வுகளை அடுத்த வாரத்தில் மேற்கொள்ளவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் சுரங்கப்பாதையில் நீரை நிரப்பியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதா என்பது நீரியல் அல்லது புவியியல் ஆய்வுகள் மூலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மலித்தகொல்ல எனும் சாய்வான பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் மண்சரிவை செயற்பட்டு அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புவியியல் இருப்பிடத்தின்படி, எல்ல – கரந்தகொல்ல பிரதேசமானது உமாஓயா திட்டத்தின் கீழ் டயரம்ப நீர்த்தேக்கத்திற்கு சுமார் 2.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் அவ்விடத்தில் மண்சரிவுகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையால், சுமார் 15 ஏக்கர் மலை இடிந்து விழுந்துள்ளது.

அப்பகுதியின் மேற்பரப்பு மற்றும் உள் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான காரணிகளால் மீண்டும் சரிவு அபாயம் ஏற்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எல்ல-வெல்லவாய பிரதான வீதியும் இதனால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin