தம்மிக்கவுக்கு அடித்த அதிஷ்டம்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

விஜயதாசவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும் வழங்கபடக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.

அரசாங்கத்தில் பிரதான அமைச்சர்களுள் ஒருவராக உள்ள விஜேதாச ராஜபக்ச, கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே இவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். என்றாலும், அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக நாடாளுமன்றத்தில் தனியாக தமது பணிகளை முன்னெடுத்து வந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் இவர் நீதி அமைச்சராக பொறுப்பேற்றதுடன், தொடர்ந்து அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக பணியாற்றி வருகிறார் விஜேதாச.

இந்தப் பின்புலத்தில்தான் சு.கவின் பதில் தலைவராக பொறுப்பேற்று சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளார். என்றாலும், இந்த விடயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இதுவரை எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.

Recommended For You

About the Author: admin