உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் அறிய முடிகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசாநாயக்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், ரஞ்சித் ஆண்டகையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
”தேர்தலொன்று நெருங்கிவரும் சூழலில் கத்தோலிக்க மக்களை பகடைக்காயாக பயன்படுத்தும் நோக்கில் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் தேட பார்க்கும் சிலரது பேச்சுகளை கேட்டு ரஞ்சிம் ஆண்டகை செயல்படுகிறார்.” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தப் பின்புலத்திலேயே பேராயர் பதவியை நீடிக்குமாறு கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
80 வயதாகும் ரஞ்சித் ஆண்டகை, போப் பதவிக்கு போட்டியிட தகுதிபெற்ற ஒருவராக இருக்கிறார். கடந்த காலத்தில் போப் பதவிக்கு ரஞ்சித் ஆண்டகை போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக உலகளாவிய ரீதியில் பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இருந்த போதிலும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இலங்கைக்கு அப்பாலான தமது திருப்பணியை அவர் தொடரவில்லை.
கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பேராயராக தொடர்வதற்கான அனுமதியை போப் மாத்திரமே வழங்க முடியும். இங்கு எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இடம்பெற அனுமதிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.