மைத்திரியை கண்டுகொள்ளாத நிமல் கட்சிக்குள் உச்சகட்ட கருத்து மோதல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் கருத்து மோதல்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

கட்சியின் இடைக்கால தலைவராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா செயல்படுவதுடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை 18ஆம் திகதிவரை தலைவராக செயல்பட நீதிமன்றத்தால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பை மீறியமை, கட்சியின் யாப்பாபை சர்வாதிகரமாக செயல்படும் நோக்கில் மாற்றியமைத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மைத்திரிபாலவுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரமே அவர் தலைவராக செயல்பட இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

கூண்டோடு அகற்றப்படுவார்கள்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக செயல்படும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டால் அது சந்திரிக்காவின் வெற்றியாக கொண்டாடப்படும். மறுபுறம் மைத்திரிபாலவுக்கு சாதகமான முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டால் சந்திரிக்காவின் அணியினர் கட்சியில் இருந்து கூண்டோடு அகற்றப்படுவார்கள்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினம் கொழும்பு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மைத்திரி மற்றும் சந்திரிக்காவின் தரப்பினர் கலந்துகொண்டனர். இருதரப்பினரும் இருபுறங்களில் அமர்ந்திருந்தனர். நிகழ்வுக்கு முன்னதாகவே வருகை தந்திருந்த நிமல் சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிறிசேன மாநாட்டு பண்டபத்துக்கு வருகைதரும் போது, எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

எவருடனும் கைகோர்த்து செயல்பட தயார்

கடந்தகாலங்களில் முக்கிய நிகழ்வுகளில் மைத்திரிபாலவை காணும் போது எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்துவதை நிமல் சிறிபாலடி சில்வா வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், இன்று அமர்ந்திருந்தவாறே வணக்கம் செலுத்தியதுடன், மைத்திரியை கண்டுகொள்ளாதவாறு இருந்தார். இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

அதேபோன்று, குறித்த நிகழ்வில் உரையாற்றிய நிமல் சிறிபாலடி சில்வா, கட்சியின் யாப்பை மாற்றி சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டமைக்கு கண்டனத்தை வெளியிட்டதுடன், பழைமைவாத கொள்கைகளில் இருந்து சு.க நவீன கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சு.கவை வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற பண்டாரநாயக்க உருவாக்கவில்லை. எமது கட்சிக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அதன்படி அனைவருடனும் கைகோர்த்து செயல்பட தயார் என்றார்.

கட்சியை யார் வழிநடத்துவதென்ற உச்சகட்ட கருத்து மோதல் கடந்த சில நாட்களாக சு.கவில் வலுபெற்றுள்ளது. நாளைய தினம் இதற்கான தீர்வு கிடைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin