ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கத்திற்கு மாறாக ரச்சின் ரவீந்திராவுடன் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இந்த மாற்றம் சிஎஸ்கே அணிக்கு பெரிதளவில் எடுபடவில்லை.
அஜிங்கியா ரஹானே 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ரச்சின் ரவீந்திரா, ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு 21 ரன்களில் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – ஷிவம் தூபே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அதன்பின் இருவரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து 27 பந்துகளில் ஷிவம் தூபேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களைத் தாண்டியது. பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, மறுபக்கம் ஷிவம் தூபே வழக்கம் போது அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 17 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செல் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசியதுடன், 4 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். ஷிவம் தூபே 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா – இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களைக் குவித்தார். இதையடுத்து இன்னிங்ஸின் எட்டாவது ஓவரை நட்சத்திர வீரர் மதீஷா பதிரன வீசினார்.
அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷான் 23 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதற்கிடையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 31 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மாவும் பதிரன பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கும், அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய டிம் டேவிட் 13 ரன்களுக்கும், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஒரு ரன்னிலும் என தங்களது விக்கெட்டுகளை இழந்து மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற 47 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீச அதில் மும்பை அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதிவரை போராடிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் சதமடித்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஆறுதலளித்தார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பதிரன 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.