டி20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக்?: ரோகித் ஷர்மாவின் வேடிக்கை

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தலைவரும், மும்பை அணியின் வீரருமான ரோகித் ஷர்மாவின் வேடிக்கையான செயல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்சிபி) ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவுசெய்திருந்தார். இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் பெங்களூரு அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 61 ஓட்டங்களையும், ரஜத் படிதார் 50 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 53 ஓட்டங்களையும் குவித்தனர். மும்பை அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

197 என்ற வெற்றி இலக்கை மும்பை அணி 15.3 ஓவர்களில் எட்டியது. இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.

பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது தினேஷ் கார்த்திக் மிகவும் அவசியமான பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடனேயே பெங்களூரு அணியால் கௌரவமான இலக்கை அடைய முடிந்தது.

23 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 53 ஓட்டங்களை தினேஷ் கார்த்திக் குவித்தார்.

கார்த்திக் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது, மும்பை அணியின் வீரர் ரோகித் ஷர்மா, டி20 உலகக் கிண்ணத்திற்கான வீரர்களின் தெரிவு குறித்த கருத்துடன் அவரை புன்னகையுடன் கிண்டல் செய்தார்.

“கார்த்திக் உலகக் கிண்ண தொடரில் விளையாட வேண்டும்” என ஷர்மா கூறுகின்றார். இது அங்கிருக்கும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin