தனது பிள்ளையின் வாழ்க்கை இப்படி இருண்டு போவதை ஒரு தாயாலும், தந்தையாலும் பார்க்க முடியுமா..?
ஆனால், அந்த துரதிஷ்டவசமான நிலையை ஒரு தாயும் தந்தையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஏன் இவ்வளவு தண்டிக்கப்பட்டார்? இது அவரது பெற்றோர் எழுப்பும் கேள்வி.
இந்த சம்பவம் மதவாச்சியில் பதிவாகியுள்ளது.
மதவாச்சி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலால் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான்,தனது மற்றுமொரு நண்பருடன் சிறிய லொறியொன்றில் பயணித்த போது, பின்னால் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வாகனத்தை நிறுத்தி தம்மை தாக்கியதாக காயமடைந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலால் இளைஞனின் விதைப்பையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் விதைப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தின் பின்னர் நடந்தது என்ன? அதனைப் பற்றி முதற்தர சிங்கள பத்திரிகையான ‘தினமின‘ பத்திரிகை இவ்வாறு வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவத்துக்கு முகம் கொடுத்த திலீஷ,
கடந்த 7ஆம் திகதி பட்டா ரக லொரியை திருத்தியமைத்து நானும் எனது நண்பரும் மீண்டும் வரும்போது, போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர் பாதையில் இருந்தனர். ஏராளமான வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
அந்த இடத்தைக் கடந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றபோது, எதிரே ஒரு டிராஃபிக் மோட்டார் சைக்கிள் எங்கள் முன் வந்து பாதையை வழி மறித்து நின்றது.
என்னையும் எனது நண்பனையும் வெளியே இழுத்து எடுத்தார்கள்.
என் கைகளை பின்னால் கட்டி காரில் ஏற்றி அடித்தனர்.எங்கள் லொரிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டியில் வந்த நான்கு பொலிஸார் எனது நண்பரை தடியால் அடித்தனர்.
எங்களை மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்தனர்.
அப்போது, நான் மிகவும் சிரமப்படுகிறேன், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறினேன்.
வைத்தியரிடம் அழைத்துச் சென்ற போது, வைத்தியர் என்னைப் பார்த்து மிகவும் கஷ்டப்படுகிறார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விதைப்பையில் இரத்தம் கசிந்துள்ளதால் சத்திரசிகிச்சை மேற்கொண்டனர்.
எதற்காக தாக்கப்பட்டோம் என்று தெரியவில்லை. அந்த போக்குவரத்து அதிகாரிகள் எங்களுக்கு வாகனத்தை நிறுத்துமாறு கூறினார்களாம். நாங்கள் பார்க்கவில்லை. ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இப்போது என் கழுத்து, இடுப்பு மற்றும் சிறுநீர்ப்பை பகுதியில் கடுமையான வலியை உணர்கிறேன்.
இளைஞனின் தாயார் கே.பி.பிரியதர்ஷினி,
“மகன் வேறொரு நண்பருடன் வாகனத்தை திருத்தியமைக்க மதவாச்சிக்கு சென்றார். அப்போது பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மகன் அதைக் காணவில்லை என்று கூறினார்.
அதன்பின், துரத்திச் சென்று, வாகனத்தில் இருந்து இறக்கி, மகனின் கைகளை பின்னால் கட்டி, காலால் உதைத்து, அடித்துள்ளனர்.
தற்போது சத்திரசிகிச்சை செய்து எனது மகனின் விதைப்பைகளில் ஒன்றை அகற்றியுள்ளனர். என் பிள்ளையின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இந்த சோகத்தை யாரிடம் சொல்வது?
“அவர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை தயாரித்து கொரிய பாடத்தை கற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து, மதவாச்சி பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ்மா அதிபர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் நீதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படி ஒரு தண்டனையை வழங்கும் அளவிற்கு என் மகன் குற்றத்தை செய்யவில்லை” என்றார்.
மதவாச்சி பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஐ.பி. ரத்நாயக்க,
“இந்தச் சம்பவம் கடந்த 7ஆம் திகதி நடந்தது. மதவாச்சி, மன்னார் வீதியில் ஆரம்பப் பாடசாலைக்கு அருகில், கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவர், பட்டா ரக லொறியை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டிய போதும் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றுள்ளனர்.
அப்போது, சம்பவத்தை பார்த்த பொலிஸ் முச்சக்கரவண்டியில் வந்த அதிகாரிகள் லொரியை துரத்திச் சென்றனர். அதன் பிறகு சுமார் ஒன்பது கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
ஒரு அதிகாரி லொரியின் கதவில் தொங்கியிருக்கிறார். ஆனால் நிறுத்தப்படவில்லை. இறுதியாக, துலாவெளி புறவழிச்சாலையில் லொரி நிற்கிறது.
எங்கள் குழு சென்று அவர்களை பிடிக்கின்றனர். வாகனத்தின் சாரதி வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளமை தெரிய வந்துள்ளது.
வாகன சாரதியின் நண்பர் ஐந்து லீட்டர் சட்டவிரோத மதுபான போத்தலை வாகனத்தில் கொட்டியுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, கவனமின்மையுடன் வாகனம் செலுத்தியமை, உத்தரவை மீறி வாகனம் செலுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதியின் உதவியாளர் (நண்பர்) சட்டவிரோத மதுபானம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது, விதைப்பை வீங்கியிருப்பதாகச் கூறியுள்ளார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாங்கள் தாக்கவில்லை“ என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கெபிதிகொல்லாவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள சமன் விக்கிரமநாயக்கவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு போக்குவரத்து அதிகாரிகளும் வேறு இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்’.
எவ்வாறாயினும், இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதிது அல்ல. பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களும் உள்ளனர்.
தவறு இழைத்து விசாரணை எனும் பேரில் அழைத்துச் சென்று கொடுமைகளுக்கு ஆளாக்கி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவங்கள் பல.
குறித்த இளைஞன் மேற்கூறியவாறு தவறுகளை இழைத்திருந்தாலும் கூட அவருக்கான உரிய தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என சமூக ஆர்வலரகள் தெரிவிக்கின்றனர்.