நாட்டில் ராஜபக்சவினரின் அரசியல் முடிந்துவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாமல் ராஜபக்ச கட்டாய அறுவைச் சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட அரசியல் குழந்தை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யும் சதியில் பசில் ராஜபக்சவிற்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
ஆகையினால் பசிலை அரசியல் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் எனவும் விமல் வீரவன்ச எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியலில் இருந்து ஓய்வு பெரும் எண்ணம் தனக்கு இல்லையெனவும், தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தோ அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட வேறு எந்த அரசியல் தலைவர்களிடமிருந்தோ இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
எனினும், பலரும் என்னை சந்தித்து நலன் விசாரித்துச் செல்கின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து யாரும் பேசுவதில்லை” எனவும் கூறியுள்ளார்.