தந்தையின் சிகிச்சை குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாரதிராஜாவின் மகன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதி ராஜா இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர். இந்நிலையில் பாரதிராஜா இன்று வீடு திரும்பினார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பாரதி ராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பேசியதாவது, “அப்பா நன்றாக இருக்கிறார். பழைய பாரதிராஜாவை நீங்கள் பார்க்கலாம். பழைய கிண்டல், கேலி எல்லாம் உள்ளது. இதற்கு மிகப்பெரிய நன்றியை நான் மருத்துவமனைக்கு தான் சொல்ல வேண்டும்.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள். அப்பாவின் அனைத்து மருத்துவச் செலவையும் நான் தான் பார்த்தேன். எங்களுடைய குடும்ப வங்கியில் இருந்து தான் அனைத்து செலவையும் செய்தோம். சிகிச்சைக்கு பணம் இல்லை என்று கூறிய செய்திகள் வதந்தியானது. எங்கள் நண்பர்களின் அறிவுறுத்தல் மூலம் தான் நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வந்தோம். மருத்துவர்கள் அனைவரும் எனக்கு கடவுள் தான்” என்று பேசினார்.

Recommended For You

About the Author: webeditor