இனவாத அரசியல் வேண்டாம் என்கிறார் அநுரகுமார

தமிழ் பேசும் மக்கள் அவர்களின் சொந்த மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு முழு உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் முக்கிய துறைகளில் தமிழ் இளைஞர், யுவதிகளின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்கால சந்ததியினரின் சார்பாக நாட்டில் இனவாத அரசியல் கலாசாரத்தை தோற்கடிப்பது இன்றியமையாதது எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

“எமது பிரதான அரசியல் நீரோட்டம் இதுவரை போட்டி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளது. தெற்கில் சிங்கள மக்கள் வடக்கிற்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டனர்.

வடக்கில் தமிழ் மக்கள் தெற்கில் சிங்கள மக்களுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டனர். இந்த இனவாத அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உண்மையிலேயே அக்கறை இருந்தால் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் இதன் போது அழைப்பு விடுத்துள்ளார்.

“வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களை ஒன்று கூடி ஆட்சி அமைக்க அழைக்கிறோம். புதிதாக சிந்திப்போம். நம் நாட்டில் இரண்டு முக்கிய மொழிகள் உள்ளன. இரு மொழிகளுக்கும் சம உரிமை உண்டு.

அந்தந்த மொழிகளில் அரசாங்கத்துடன் தொடர்புக்கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஒரு தமிழர் அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் என்றால் அவர் தமிழில் பதிலை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, பொது நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் முக்கிய துறைகளில் தமிழ் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தின் விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இனவாதம் மற்றும் தீவிரவாதம் நிராகரிக்கப்பட்டு ஒவ்வொரு சமூகத்தின் அடையாளமும் மதிக்கப்படும் புதிய சமூகம் இலங்கைக்கு தேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin