ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலை மையப்படுத்தி பழிவாங்கல், தூற்றல், போற்றல் என எல்லாம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று, சர்ச்சைகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு தீனி போடுவது போலவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையையும் எதிர்கொண்டார்.

தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க முடியாது என மறுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இவ்வாறு, ஒவ்வொரு சம்பவங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் மற்றுமொரு சூடுபரப்பும் செய்தி வெளியானது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவலாக கிடைத்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தீர்மானங்களை கட்சியின் மத்திய குழு உள்ளிட்ட கட்சியின் ஏனைய குழுக்களே தீர்மானிக்கும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பொருளாளர் லசந்த அழகியவண்ண ஆகியோர் மீண்டும் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்புவதே தமது ஒரே நோக்கம் என தெரிவித்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர கட்சியை விட்டு வெளியேறியவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin