இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளும் அதிகரித்துள்ளன.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இந்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளும் ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குலத்தின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் தேர்தலில் இராஜதந்திர யார் பக்கம் நிற்பது என்பதில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளார்.
சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்
கடந்த காலங்களில் அவரது நிலைப்பாடு இந்தியாவுடன் இணக்கமான போக்கில் செயல்படுவதாக இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக அவரது நகர்வு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டின் ஊடாக மஹிந்தவை தோற்கடித்து ஐ.தே.கவின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனவை அவர் ஜனாதிபதியாக்கும் நகர்வில் ஈடுபட்டிருந்தார்.
என்றாலும், பின்னர் சீனாவின் ஆதிக்கத்தை அவரால் தடுக்க முடியாது போனதுடன், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சீனா, இந்தியாவின் சமமான ஆதரவு அவசியம்
இந்த நிலையில், அவர் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் ராஜபக்சர்கள் போன்று சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேண ஆரம்பித்துள்ளார். அதன் வெளிப்பாடுகள்தான் இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீனாவின் கப்பல்களை ஆய்வு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் அனுமதித்தமை.
என்றாலும், இந்தியாவை சமாதானப்படுத்தும் உத்திகளையும் அவர் கையாண்டு வருகிறார். அதற்காக எட்கா உடன்படிக்கையை மீள கைச்சாத்திட மேற்கொள்ளும் முயற்சி மற்றும் இந்தியாவுக்கு திருகோணமலை உட்பட சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள ஆதரவளித்தமை போன்ற விடயங்கள் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சீனா மற்றும் இந்தியாவின் சமமான ஆதரவு அவசியமாக உள்ளது.
இவர்களது மகுடியையும் ரணில் விக்ரமசிங்கவால் ஊத வேண்டியுள்ளது
ரணில் விக்ரமசிங்க, சீனாவின் பிடியில் இருந்து நழுவ பார்த்தால் விமல் வீரவங்ச தலைமையிலான இனவாத தரப்புக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் சீனா உள்ளது. அதற்கான மறைமுக பேச்சுகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் சென் சியாங்குவான் மற்றும் இனவாதத்தை பேசுபவராக இலங்கையில் பரவலாக அறியப்படும் விமல் வீரவன்ச ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளதுடன், எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
சீனாவை தம்பக்க வைத்துக்கொள்ளும் தேவை ரணிலுக்கு உள்ளது. இந்தியாவை காட்டிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனாவே இலங்கைக்குள் அதிக முதலீடுகளை மேற்கொள்கிறது.
அதற்கு அப்பால் ராஜபக்சர்களின் அரசியல் நகர்வுகள் சீனாவுடன் இணக்கமானது. தேர்தலில் ராஜபக்சர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள இவர்களது மகுடியையும் ரணில் விக்ரமசிங்கவால் ஊத வேண்டியுள்ளது.
சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதிக்கம்
சீனாவின் பக்கம் ரணில் நின்றால் இந்தியாவின் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். அதற்கான சமிக்ஞையாகதான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதுடன், அவருக்கு மகத்தான கௌரவத்தை இந்தியா அளித்தமை. அத்துடன், ஊடகப்பிரபல்யங்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
ரணில் இந்தியாவை கண்டுகொள்ளாது ராஜபக்சர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் சீனா சார்ப்புக் கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்தால் தேர்தலில் அனுரவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என்ற செய்தியே அனுரவுக்கு புதுடில்லியால் அளிக்கப்பட்ட கௌரவத்தின் ஊடாக ரணிலுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தி.
இதேவேளை, அமெரிக்காவும் தமக்கு சார்பான ஒரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும் இந்தியாவும் இருப்பதால் அவர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள தயாராக உள்ள வேட்பாளரை ஆதரிக்க கூடும்.
இதனால் உள்நாட்டில் உள்ள நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இராஜதந்திர நெருக்கடிகளையும் இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராஜதந்திர அழுத்தங்கள் தொடர்பிலான விடயங்களுக்குள் இன்னமும் ஒரு பேசுபொருளான நபராக மாறவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.