இந்திய மற்றும் சீனாவிற்கு இடையில் பனிப்போர் வலுத்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுடனான உறவை சமாந்தரமான முறையில் கையாள இலங்கை முற்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் டில்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இலங்கையின் உயர் மட்ட குழு தனித் தனியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
டெல்லியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணியாளர் குழு தலைமை அதிகாரி சாகல ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) திட்டங்கள், விமான நிலையம் மற்றும் துறைமுக அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதமர் தினேஸ் குனவர்தன தலைமையிலான குழுவினர் சீனாவிற்கு சென்று பட்டுப்பாதை திட்டம், காலநிலை மாற்றம், மருத்துவம், விவசாயம் தொழில்நுட்பம், ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் அதிகாரப் போட்டி
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நடந்துவரும் போட்டி இந்த நாட்களில் தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவின் அண்டைய நாடான மாலைத்தீவு சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டியதை அடுத்து இந்த நிலை மோசமடைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இரு நாடுகளையும் சார்ந்திருப்பதன் காரணமாக, இந்த போட்டியிடும் சக்திகளுக்கு இலங்கை பணயக்கைதியாக மாறியுள்ளது.
இலங்கையில் விரைவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த இரு நாடுகளும் இலங்கை அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கம் காட்டியுள்ளன.
இந்த நாடுகளுக்கு விஜயம் செய்த இலங்கையின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இரு தூதுக்குழுக்களும் அந்நாட்டின் மூத்த அரசாங்க அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.
இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட புவிசார் அரசியல் சூழ்நிலைகளில் நிறைய ஆபத்தில் இருப்பதால், இலங்கைப் பிரதிநிதிகளால் அல்ல, இந்திய மற்றும் சீனத் தரப்பினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்க எந்த யூகமும் தேவையில்லை.
இந்தியப் பெருங்கடலில் மேலாதிக்கத்திற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த பனிப்போர் இலங்கையை இராஜதந்திர உறைபனிக்கு ஆளாக்கியுள்ளது.
உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் உள்ள முக்கிய கனிய வளங்களை கையகப்படுத்தும் பந்தயத்தில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது’ என்ற தலைப்பில் பிபிசி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் மதிப்புமிக்க தாதுக்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு அடி எடுத்து வைத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மீட்டர்களுக்குக் கீழே உள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற பெரிய வைப்புகளை அடைவதற்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.
இந்த கனிமங்கள் சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம், மின் வாகனங்கள் (மின்சார வாகனங்கள்) மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இது போன்ற ஆய்வுப் பணிகளுக்கு உரிமம் வழங்குவது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த சர்வதேச கடற்பரப்பு ஆணையம் (ISA) ஆகும்.
ISA இந்த வாரம் ஜமைக்காவில் கூடியது, இதில் இந்தியா சார்பில் அந்நாட்டின் புவி அறிவியல் அமைச்சகத்திலிருந்து ஒரு உயர் மட்டக்குழு கலந்துகொண்டிருந்தது.
இந்தியா ஆய்வு செய்வதற்கு விண்ணப்பித்த கடற்பரப்பில் மற்றொரு நாடு இருப்பதாக ISA சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நாடு இலங்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
உரிமை கோரியது இலங்கை
இந்த கனிம தாதுக்களின் இணைப்பு அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் அதன் கண்ட அமைப்பில் இருப்பதாக ஐ.நா.வின் கடல் சட்டத்தின் மாநாட்டின் கீழ் இலங்கை ஏற்கனவே உரிமை கோரியுள்ளது.
இலங்கையின் உரிமைக்கோரளை இந்தியா அறியாமல் இருந்திருக்க முடியாது, எனினும், அதனை ஆய்வு செய்வதற்கான விண்ணப்பத்துடன், இந்தியா ஒரு அடி எடுத்துவைத்துள்ளது.
இதன் காரணமாகவே சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.
இதன் வெளிப்பாடாகவே ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதற்கு ஒரு வருட காலம் தடைவிதிக்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த சீனக் கப்பல்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, கடலின் அடிப்பகுதியில் உள்ள கனிமங்களுக்கான போட்டியில் ஈடுபடுவதும் இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் மத்தியில் அதிகரித்து வரும் தலைவலிகளை இலங்கை எதிர்கொள்ளப் போகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.