இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை சீனா வழங்கும் என பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.
2022ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இலங்கைக்கு முதல் உதவியாளராக இந்தியா கைகொடுத்ததுடன், சீனாவும் பல்வேறு வழிகளில் உதவியளித்திருந்தது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளும் நீண்டகாலமாக சுமூகமாகவே உள்ளது. என்றாலும், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கவலை
சீனா இலங்கையில் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள், இந்தியாவின் புவிசார் நலனுக்கு அச்சுறுத்தலான அல்லது இந்தியாவை கோபத்துக்கு உள்ளாக்கும் திட்டங்களாகவே உள்ளன.
பிரதமர் தினேஸ் குணவர்தனவின் அண்மைய பயணத்தில் எட்டப்பட்ட சில உடன்பாடுகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னத்தை அதிகரிக்கும் வகையில் உடன்பாடுகள் எட்டப்படடிருந்தன. இதற்கு இந்திய கவலை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமரின் பயணம் சீனாவை சமதானப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் அதிக அக்கறை கொண்டிராத சீனாவை அக்கறைக் கொள்ளவும் வைத்துள்ளது.
கொழும்பில் சீனாவின் ஆதிக்கம்
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் பிரதமர் தினேஸிடம் உறுதியளித்துள்ளதாக AFP செய்தி வெளியிடடுள்ளது.
இதனால் கடன் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, “போர்ட் சிட்டி திட்டம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை சீனாவின் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்திற்குள் உள்வாங்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் AFP செய்தி வெளியிடடுள்ளது.
கொழும்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இந்த விடயம் தொடர்பில் கொழும்புக்கு கடும் நெருக்கடிகள் புதுடில்லியில் இருந்து கொடுக்கப்படும் என இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இறுதி செய்யப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. சீனாவின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ள சில உடன்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே பிரதமரின் பயணம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.