அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் இதற்கு முன்னர் பல விபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து பிரேமஹாவன் நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது துறைமுகத்தின் மேடையில் கப்பல் மோதியதுடன் அதன் பல மீட்டர் பகுதிகளுக்கு சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதன்படி, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் வட கடல் கொள்கலன் முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது ஒரு படகு மீது மோதியதாக ஆண்ட்வெர்ப் துறைமுக அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிலியில் உள்ள சான் அன்டோனியோவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கப்பலில் உந்துவிசை மற்றும் துணை இயந்திரங்கள் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் மோதியதில் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
அமெரிக்காவின் பிரம்மாண்டமான ஒரு பாலம் இடிந்து விழுந்த தருணமாக இது பார்க்கப்படுகிறது.
பாலத்தில் மோதியதையடுத்து, கப்பலில் அடைக்கப்பட்டிருந்த 13 கொள்கலன்கள் சேதமடைந்தன. பாலத்தில் இருந்த சுமார் ஏழு பேர் ஆற்றில் விழுந்துள்ள நிலையில் பாலத்தில் பயணித்த வாகனங்களும் ஆற்றில் விழுந்துள்ளன.
பாலத்தில் மோதிய கப்பல் மார்ஸ்க் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளதுடன் கப்பல் நிறுவனமான மார்ஸ்க், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.
மேலும் ஆற்றில் விழுந்த கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என்ற அனுமானத்தில் அபாயகரமான பொருட்களில் பயிற்சி பெற்ற அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விபத்தை அடுத்து கப்பலில் இருந்து சுமார் 1.8 மில்லியன் கேலன் டீசல் தண்ணீரில் கசியும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்க அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து மேரிலேண்ட் மாநிலத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் பயணத்த டாலி கப்பல் உந்து சக்தியை இழந்து அதன் பின்னரே குறித்த பாலத்தின் துணைக் கோபுரத்தில் மோதியது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததால் பால்டிமோர் துறைமுகத்துக்கான பாதிப்பு
பால்டிமோர் துறைமுகம் வடகிழக்கு கடற்பரப்பில் உள்ள மிகச்சிறிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும். குறித்த மோதலைத் தொடர்ந்து துறைமுகத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம்
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் பால்டிமோர் துறைமுகத்தைக் கடப்பதற்கான மூன்று வழிகளில் ஒன்றாகும் மற்றும் ஒரு நாளைக்கு 31,000 கார்கள் அல்லது ஆண்டுக்கு 11.3 மில்லியன் வாகனங்களை அது கையாண்டுள்ளது.
இது 1977ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு படப்ஸ்கோ ஆற்றைக் கடக்க உதவுகிறது.