இலங்கை இராணுவத்தினர் தமது கடமைகளில் இருந்து விடுப்பு எடுத்து, ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தினருடன் இணைந்து களமுனைகளில் போராடுவதாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.
இராணுவ ஊடகப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார எமது ஒருவன் செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
“இராணுவத்தில் கடமையாற்றிவரும் எவரும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய போர் களமுனைகளில் இல்லை. அவ்வாறு யாரும் செல்லவும் முடியாது.
படையில் இருக்கும் ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டுமாக இருந்தால் அதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், படையில் இருந்து விலகிய பலர் ரஷ்ய மற்றும் உக்ரைன் போர் களத்தில் இணைந்து செயற்படுதாக அவர் தெரிவித்துள்ளார்.
படையில் இருந்து விலகியவர்கள் அவ்வாறு வெளிநாட்டு படைகளில் இணைவதை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே இலங்கையில் இருந்து எவரும் ரஷ்யாவிற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள படைகளில் இணைந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து ரஷ்யாவிற்குச் சென்ற முன்னாள் இராணுவத்தினரே அங்குள்ள படைகளில் இணைந்துள்ளனர்.
அண்மையில் கொல்லப்பட்ட இருவரும் டுபாயில் இருந்து ரஷ்ய சென்ற முன்னாள் இராணுவத்தினர்” எனவும் மேஜர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் போது எதிரி நாடுகளிடம் பிடிபடும் படையினருக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய வரப்பிரசாதம் கிடைக்கும்.
எனினும் கூலிப்படையாக இணைந்து செயற்படுபவர்களுக்கு அவ்வாறு வரப்பிரசாதங்கள் கிடைக்காது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தினருடன் களமுனைகளில் சேவையாற்றுவதற்காக தற்போதைய இலங்கைப் படையினர் தமது கடமைகளில் இருந்து விடுப்பு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ரஷ்ய இராணுவ சீருடையில் இலங்கைப் படையினர் போர் வலயத்தில் கடமையாற்றும் காணொளி வெளியாகியுள்ளது.
எனினும், குறித்த காணொளி பதிவு செய்யப்பட்ட திகதி மற்றும் இடம் என்பன குறிப்பிடப்படவில்லை.
ஓய்வுபெற்ற படையினருக்கு மேலதிகமாக, தற்போது இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் சில துருப்புக்கள் ரஷ்ய இராணுவத்துடன் போரிடுவதற்காக விடுமுறை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்றி வருவதாகவும், இன்னும் பலர் இணைந்துகொள்ள முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அதிக ஊதியம் காரணமாக அவர்கள் ரஷ்ய படையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போரில் இலங்கை வீரர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ஆட்சேர்ப்பு செய்வதை இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பிலேயே இராணுவ ஊடகப் பணிப்பாளரை எமது செய்திப் பிரிவினர் தொடர்புகொண்டு வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.