இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு மத்தியில் காஸாவில் “உடனடியான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை (UNSC) நிறைவேற்றியது.
அமெரிக்கா முன்மொழிந்த நடவடிக்கையை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ செய்த சில நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்கெடுப்பில் வெற்றி கிட்டியுள்ளது.
ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக பாதுகாப்பு பேரவை பிளவுபட்டுள்ளது. எட்டு தீர்மானங்களில் இரண்டை மட்டுமே அங்கீகரித்துள்ளது.
இந்த இரண்டு தீர்மானங்களும் முக்கியமாக பேரழிவிற்குள்ளான காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவியை வழங்குகின்றன.
ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு பேரவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா, இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்துள்ளது.
ஆனால் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால், பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு எதிரான போரை நடத்துவதில் இஸ்ரேலுக்கான ஆதரவை அமெரிக்கா குறைத்துள்ளது.
உத்தியோகபூர்வ இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒக்டோபர் 7 ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலில் 1,160 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஹமாஸ் போராளிகளை அழிப்பதாக இஸ்ரேல் சபதம் செய்துள்ளது.
அவர்கள் சுமார் 250 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்தனர், அவர்களில் 130 பேர் காஸாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.
இதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.
காஸா பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், பிரதேசத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 32,226 என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 72 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் கூறியது, தெற்கு நகரமான ரஃபாவில் ஐந்து வீடுகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வெள்ளியன்று, பணயக்கைதிகளை விடுவிப்பதோடு தொடர்புடைய “உடனடி” போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா சமர்ப்பித்த வரைவின் மீது பாதுகாப்பு பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சீனாவும் ரஷ்யாவும் தீர்மானத்தை வீட்டோ செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.