வெடுக்குமாறிமலை 3000ம் ஆண்டு பழமையான தமிழர்களின் ஆலயம்

வெடுக்குமாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆயலம் 3000ம் ஆண்டு பழமை வாந்தது. அப்பகுதியை சூழ தமிழர்களான நாகர்களே வாழ்ந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய சிறிதரன்,

”பழமையும் பாரம்பரியமும் கொண்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் தமிழ் பிராமிய கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துகளை காண முடியும். வெடுக்குமாறிமலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வரம் என்ற சிவன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தை கைப்பற்ற பௌத்த துறவிகள் முயற்சி

ஐந்து தலைமுறைகள் கடந்து அங்குவாழும் மக்கள் இந்த ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றன. 1988ஆம் ஆண்டு அப்பகுதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போது, அவர்களது பாதுகாப்புடன் அங்கு மகாசிவராத்திரி இடம்பெற்றிருந்தது.

1990களின் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அங்கு மகாசிவராத்திரி இடம்பெற்று வந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னரும் அங்கு குடியேறிய மக்கள் 2010ஆம் ஆண்டுமுதல் ஆதிலிங்கேஸ்வரரை வழிபட்டு வந்துள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் இந்த ஆலயத்தை கைப்பற்ற பௌத்த துறவிகள் செயல்பட்டு வருகின்றனர்.

விக்ரகங்களும் அடியோடு அகற்றப்பட்டது

2018ஆம் ஆண்டு முதல் இங்கு தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பறித்து வருகின்றனர். அதன் பின்னர் இங்கு வழிபடும் உரிமையை பறிக்கும் வழக்கு 2019இல் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஆலய பூசகர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

தொல்பொருள் திணைக்களத்தாலும் 2019ஆம் ஆண்டு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், ஆலயத்தின் அனைத்து விக்ரகங்களும் அடியோடு அகற்றப்பட்டமை 2023ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

புதரொன்றில் எறியப்பட்டிருந்த சிவலிங்கத்தை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்து பிரதேச மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாண்டு மகாசிவராத்திரியை சிறப்பாக செய்ய முற்பட்ட போது பூசகர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நல்லிணக்கம் என்பது பேச்சளவில் இருப்பது அல்ல

வழிபாடுகளை தடுக்க 500 இற்கும் மேற்பட்ட கலகமடக்கும் பொலிஸார் இங்கு நிறுத்தப்பட்டு மக்களை அடக்க முற்பட்டனர். பக்தர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலையும் நடத்தினர். பொலிஸார் இங்கு மனிதாபிமானமற்ற விதத்திலேயே நடந்துகொண்டனர்.

இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது 3000ம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் ஆலயமாகும்.

இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை இல்லையென்றால் எவ்வாறு நல்லிணக்கம் பற்றி சிந்திக்க முடியும். நல்லிணக்கம் என்பது பேச்சளவில் இருப்பது அல்ல. ஒருநாட்டின் மக்களை அனுசரிப்பதில்தான் அது தங்கியுள்ளது.

ஆகவே, வெடுக்குநாறிமலையில் உள்ள மக்கள் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபட எந்தவொரு தடையும் இருக்க கூடாது.

ஜனாதிபதி மற்றும் தொல்பொருள் திணைக்களம் இதற்கு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin