ஹைட்டி அமைதியின்மை

ஹைட்டியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தியுள்ள ஹைட்டியில் இயங்கும் நிறுவனங்களுடன் அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹைட்டியில் அங்கீகாரம் பெற்ற கியூபாவில் உள்ள இலங்கை தூதரகம் அந்தந்த நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்டியில் என்ன நடக்கிறது?

ஹைட்டியில் அரசுக்கு எதிரான ஆயுதக் கும்பல்களின் வன்முறை அதிகரித்துள்ள நிலையில், தனது பதவியிலிருந்து அந்நாட்டு ஜனாதிபதி ஏரியல் ஹென்றி விலகியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜிம்மி கிறிஸியர் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆயுதக் கும்பல்களின் கூட்டணி, அப்போதைய ஜனாதிபதி ஜோவனேல் மாய்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், ஜோவனேல் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோா் மீது ஜிம்மி கிறிஸியர் தலைமையிலான கும்பல் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது.

இந்நிலையில், ஜோவனேல் மாய்ஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதுடன், அப்போது பிரதமராக இருந்த ஏரியல் ஹென்றி, நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜோவனேல் படுகொலை குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டிய புலனாய்வு அதிகாரிகள், அந்தப் படுகொலையில் ஏரியல் ஹென்றிக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகம் வெளியிட்டனர்.

சர்வதேச நாடுகள் அழுத்தம்

இந்நிலையில், அரசு முறைப் பயணமாக கென்யாவுக்கு ஜனாதிபதி ஹென்றி கடந்த 29 ஆம் திகதி சென்றிருந்தபோது, ஜிம்மி கிறிஸியர் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் ஹைட்டியில் தாக்குதலில் ஈடுபட்டது.

தலைநகா் போா்ட்டோ பிரின்ஸில் தாக்குதல் நடத்தி முக்கிய அரசுக் கட்டடங்களைக் கைப்பற்றினர். அத்துடன், இரண்டு பெரிய சிறைகளை உடைத்து 4000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.

இந்த நிலையில், ஹைட்டியில் அமைதியை திரும்பச் செய்வதற்கு ஏதுவாக அதிபா் ஏரியல் ஹென்றி பதவி விலகவேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து அவர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin