தொழில்நுட்பக் கோளாறு காரணமாக LATAM ஏர்லைன்ஸ் நடுவானில் ‘வலுவான இயக்கத்தை உருவாக்கியதால்’ விமானத்தில் பயணித்த குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திங்களன்று (11) அவுஸ்திரேலியாவின் சிட்டினியில் இருந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து நோக்கி பயணித்த போயிங் 787-9 ரக விமானமே இந்த நிலையினை எதிர்கொண்டுள்ளது.
விமானத்தின் இயக்குனரின் கூற்றுப்படி, வலுவான இயக்கம் காரணமாக பயணிகள் விமானத்துக்குள் திடீரென வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆக்லாந்துக்கு விமானம் வந்தவுடன் அம்பியூலன்ஸ்களில் உதவியின் மூலமாக காயமடைந்த சுமார் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஏனையவர்கள் பெரும்பாலும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவசர மருத்துவ சேவை வழங்குனர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த தென் அமெரிக்க ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர்,
விமானத்தில் “தொழில்நுட்ப சிக்கல்” ஏற்பட்டதாகவும், இது சில பணியாளர்களையும் பயணிகளையும் பாதித்ததாகவும் கூறிய அவர் விபத்து தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்கவில்லை.
விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள விமான நிறுவனம்,
இந்த சூழ்நிலையினால், பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கும் காயத்திற்கும் வருந்துகின்றோம்.
மேலும் தமது செயல்பாட்டுத் தரங்களின் கட்டமைப்பிற்குள் முன்னுரிமையாக பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளது.