தேசிய மக்கள் சக்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது இறுதியானது அல்ல எனவும் நாட்டை கட்டியெழுப்பும் ஆரம்பம் எனவும் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகமையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களின் சகல உரிமைகளும் தற்போது இல்லாமல் போயுள்ளது.
நாட்டு மக்களுக்கு சிறந்த நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.
எங்கள் மத்தியில் வேற்றுமைகள் இருக்கலாம். எனினும் பொது நோக்கத்திற்காக இணைந்துள்ளோம்.
மக்களுக்கு உண்ண உணவில்லை
முதலில் நாங்கள் எமது நாட்டு மக்களின் உணவு உரிமையை உறுதிப்படுத்துவோம். உண்பதற்கு உணவின்றி கட்டியெழுப்பபடும் நாடு பயனற்றது.
பொருளாதாரம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
எனினும் மக்களுக்கு உண்ண உணவில்லை. உண்ண உணவில்லாத பொருளாதாரத்தால் என்ன பயன்.
நாட்டு மக்கள் ஒரு மாதத்திற்கு 6 ஆயிரத்து 500 மெற்றி தொன் அரிசியை பயன்படுத்துகின்றனர். வருடத்திற்கு 23 லட்சத்து 40 ஆயிரம் மெற்றி தொன். 35 லட்சம் மொற்றி தொன் கையிருப்பில் இருக்க வேண்டும்.
எமது நாட்டில் பெரும் போகத்தின் போது சுமார் 18 ஆயிரம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்படுகிறது.
அரிசி சந்தையின் ஏகபோகத்தை உடைத்தெறிவோம்
எமது நாட்டுக்கு தேவைப்படும் அளவுக்கு மேல் நாம் அரிசியை உற்பத்தி செய்கின்றோம்.மேலதிக கையிருப்பும் இருக்கின்றது.
எனினும் விவசாயிக்கு தனது நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை. நுகர்வோருக்கும் நியாயமான விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியவில்லை.
எமது நாட்டின் அரிசி சந்தையில் ஒரு பிறழ்வு காணப்படுகிறது.எமது நாட்டின் நெல் சந்தையில் ஒரு ஏகபோகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்களே எப்போதும் விலையை தீர்மானிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் அரிசி சந்தையின் ஏகபோகத்தை கட்டாயம் உடைத்தெறிவோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.