தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக் காணப்படுகின்றது.
தமிழரசு கட்சிக்குள் நடந்த தலைவர் தெரிவில் மட்டும் சுமந்திரன் தோற்கவில்லை. அதன் பின் கட்சிக்குள் நடக்கும் எல்லா விடயங்களிலும் அவர் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை அவரைப் போற்றிப் புகழ்ந்தவர் கம்பவாருதி.
வெளிநாடுகளோடு உறவாடவும் வெளிவகாரங்களைக் கையாள்வதற்கும் சுமந்திரனைப் போன்ற சட்டப் புலமையும் ஆங்கிலப் புலமையும் மிக்கவர் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னரே அவர் எழுதியிருக்கிறார்.
ஆனால் அதே கம்பவாருதி இப்பொழுது தமிழ் மக்கள் சுமந்திரனைப் போன்ற தந்திரசாலிகளை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பொருள்பட எழுதத் தொடங்கிவிட்டார்.அதாவது சுமந்திரனின் ஆதரவு அணிக்குள் இருந்து ஒரு முக்கியமான மதப் பிரமுகர் எதிரணியை நோக்கிப் போகிறார் என்று பொருள்.
கடந்த செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், நல்லை ஆதீன முதல்வர் போன்ற சைவ சமயப் பெரியார்களும் யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து ஒரு சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய் இரவு 8 மணிக்கு நடக்கவிருந்த அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்கு இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக் கொண்டிருந்தார்கள்.எனினும் துரதிஷ்டவசமாக சுமந்திரனின் தாயார் இறந்து போனதால்,அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு காட்சி ஊடகத்தின் அதிபர் என்ற கருத்து வெளியில் உண்டு. அவருடைய காட்சி ஊடகம் சிறீதரனுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தது என்று சுமந்திரன் அணியினால் குற்றம் சாட்டப்படுகிறது.
இவர்கள் அனைவரையும் இந்தியத் தூதரகம் இயக்குகிறது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மிகக்குறிப்பாக சிறீதரனுக்கு ஆதரவாக ஈழத்து சிவசேனைத் தலைவர் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் தமிழக பாரதிய ஜனதா ஆதரவாளர்களால் அல்லது சிவசேனை ஆதரவாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஓர் இளம் கவிஞரும் சிறீதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார். தென்மாராட்சியில் இடம்பெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து சுமந்திரன் ஆதரவு அணி மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.
ஆயின்,தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதலில் இந்தியா சிறீதரனின் பக்கம் நிற்கிறது என்று அவர்கள் கூற வருகிறார்களா ?ஒரு பிராந்தியப் பேரரசு கையாளும் அளவுக்கு தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல் ஆழமானதாக மாறி வருகிறதா? அப்படி என்றால் கட்சிக்குள் தோன்றியிருக்கும் இரண்டு அணிகளையும் இணைப்பது சாத்தியமில்லையா?
கட்சி தொடர்ந்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய ஒரு நிலைமை தொடருமாக இருந்தால், ஒரு தேர்தல் ஆண்டை-இந்த ஆண்டை -கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?
இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகவே அமையலாம் என்று ஊகிக்கலாம். ஏனெனில் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய தரப்பு பெரும்பாலும் அடுத்த ஆண்டு அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு நாடாளுமன்ற தேர்தலையும் நடத்தும். தொடர்ந்து மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி சபை தேர்தலும் நடக்கக்கூடும். அதாவது இனிவரும் இரண்டு ஆண்டுகளும் தேர்தல் ஆண்டுகளாக அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தெரிகின்றன.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்பது யாருக்கு லாபம்?
ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகள் கையெழுத்து வைக்கப்பட்ட பெற்றுக் காசோலையாக ஏதோ ஒரு சிங்கள வாக்காளருக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த முறை அதைவிடக் கேவலமான ஒரு நிலை தோன்றலாம். தமிழ் வாக்குகள் வீதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையாக மாறக்கூடிய ஆபத்து அதிகரிக்கிறது.
தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையிட வேண்டும் என்ற கருத்தை இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஆனால் சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் தலையிட முடியாத அளவுக்கு பலவீனமாக காணப்படுகின்றன.
தேர்தலுக்கு முன்பு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் இரண்டு தரப்புகளையும் மேசைக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த சிவில் சமூகத்தின் தலைவர் முன்பு தமிழரசுக் கட்சியில் இருந்தவர். அவர் இப்பொழுது சுமந்திரனுக்கு சார்பாக இருப்பதாக கருதிய சிறிதரன் அணி அந்த சமரசம் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை.
அது தொடர்பாக எழுதலாமா என்று இக்கட்டுரை ஆசிரியர் மேற்படி சிவில் சமூகத் தலைவரிடம் கேட்டபோது அவர் அது பகிரங்கமாக முன்னெடுக்கப்படாத ஒரு நகர்வு என்பதனால் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்பின் வழக்கிற்கு சில நாட்களுக்கு முன் திருமலை ஆயரின் தலைமையில் நடந்த சந்திப்பும் வெற்றி பெறவில்லை. நல்லை யாதீனத்தில் நடக்கவிருந்த சந்திப்பு சுமந்திரன் தாயாரின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் திருக்கோணமலை நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு விவகாரத்தை கட்சிக்குள் சுமூகமாகத் தீர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இத்தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு சிவில் சமூகங்கள் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான முயற்சியை முன்னெடுக்குமா?
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒப்பிட்டுளவில் பலமான சிவில் சமூகமாகிய தமிழ் சிவில் சமூக அமையமானது இந்த விடயத்தில் தலையிடுவதற்குத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் அந்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகளுக்கும் சார்பாக நிற்கிறார்கள்.
ஒருவர் சிறீதரனுக்கு எதிரான தரப்புக்காக யாழ்ப்பாணத்தில் வாதாடினார்.மற்றொருவர் திருக்கோணமலை வழக்கில் சிறீதரனுக்காக வாதிடுகிறார். ஒரே சிவில் சமூகத்தின் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கட்சிக்குள் மோதலில் ஈடுபடும் இரண்டு தரப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவது எதைக் காட்டுகின்றது?
உள்ளதில் பலமான கட்சி இரண்டாக உடைந்து நீதிமன்றத்தில் நிற்கின்றது. உள்ளதில் பலமான சிவில் சமூகம் சமரச முயற்சிகளில் ஈடுபாட முடியாத ஒரு நிலை.கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் அரசியல் சமூகமும் பலமாக இல்லை; சிவில் சமூகமும் பலமாக இல்லை.
பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தில், அரசியல் சமூகம் பலவீனம் அடையும் பொழுது அல்லது தனக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தானே தீர்க்க முடியாத போது சிவில் சமூகங்கள் தலையிடுவதுண்டு. சிவில் சமூகங்கள் பொதுவாக அரசியலில் நேரடியாக ஈடுபட விரும்பாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.
சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்பதுதான் அவர்களுடைய மகத்துவம்.அவர்கள் சமூகத்துக்கு நீதியானது எதுவோ நன்மையானது எதுவோ அதற்காகப் பக்கச் சார்பின்றி, உள்நோக்கம் இன்றி உழைப்பார்கள் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ள மகத்துவம். அவ்வாறு நேர்மையாக, நீதியாக இயங்குகின்ற, பக்கம் சாராத சிவில் சமூகப் பிரதிநிதிகள் தலையிடும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். கனம் இருக்கும்.
அவ்வாறான சிவில் சமூகங்கள் அரசியல் சமூகத்தின் மீது தலையீடு செய்யும் பொழுது அது தாக்கமான விளைவுகளை ஏற்படுத்துவதுண்டு. அதைத்தான் பேராசிரியர் உயாங்கொட “அரசியல் கட்சிகளின் மீதான சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீடு” என்று வர்ணித்தார்.
அவர் அவ்வாறு வர்ணித்தது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் நின்ற சிங்களச் சிவில் சமூகங்களுக்குத் தலைமை தாங்கிய மறைந்த சோபித பேரர் அவர்களின் நினைவுப் பேருரையிலாகும்.
அவ்வாறு அரசியல் சமூகத்தின் மீது தார்மீகத் தலையீடு செய்யக்கூடிய பலத்தோடு தமிழில் இப்பொழுது சிவில் சமூகங்கள் இல்லை.தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நீதிமன்றத்துக்குப் போகாமல் தீர்க்க முடியாது போனமை அதைத்தான் காட்டுகின்றது.
சிவில் சமூகங்கள் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.இல்லை. அது தமிழ் மக்களுக்குப் பொருந்தாது. கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் சிவில் சமூகங்கள் ஈடுபடலாம் என்றால், ஏன் கட்சிகளுக்குள் ஏற்படும் பிளவைச் சரி செய்வதற்கு சிவில் சமூகங்கள் தலையீடு செய்யக் கூடாது?
தமிழரசுக் கட்சிதான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கும் பொறுப்பு. அதனால் அக்கட்சி அழிந்து போகட்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறலாமா? தமிழரசுக் கட்சி தான் கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு பொறுப்பு என்பதை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக ஒரு தேர்தல் ஆண்டில் அக்கட்சியை முற்றாகச் சிதைய விட்டால் என்ன நடக்கும்? ஒரு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேவை என்று எல்லாரும் எழுதுகிறோம். ஆனால் நடைமுறையில் அரங்கில் மக்கள் இயக்கம் எதுவும் கிடையாது.
இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். அவற்றின் பிரதான ஒழுக்கம் தேர்தல் அரசியல்தான். இந்நிலையில் பலமான ஒரு மக்கள் இயக்கம் இல்லாத வெற்றிடத்தில், இருக்கின்ற பெரிய கட்சியும் சிதைந்தால் என்ன நடக்கும்?
எனவே இப்போது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வுடைய சிவில் சமூகங்கள் அவ்வாறு தலையீடு செய்யவில்லை என்றால், அந்த வெற்றிடத்தில் புதிது புதிதாக சிவில் சமூகங்கள் முளைக்கும். அதை ராணுவப் புலனாய்வுத் துறையும் உட்பட வெளிதரப்புகள் இயக்கும். அப்பொழுது என்ன நடக்கும்?