முட்டைக்கான நிர்ணய விலையை கொண்டுவருவதில் அரசாங்கம் தடுமாறிவருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மக்கள் பொருளாதார பாதிப்புக் காரணமாக கஸ்டங்களை அனுபவித்துவரும் நிலையில் முட்டை விலையும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நிறைஉணவுப் பொருளாக காணப்படும் முட்டையினை சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள். கர்ப்பிணிகள், நோயாளிகள் என வழங்க வேண்டிய நிலையில் உள்ள போதிலும் விலை ஏற்றம் காரணமாக போதுமான அளவில் வழங்க முடியாதுள்ளது.
இந்நிலையில், முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை எதிர்வரும் வாரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையகத்துக்கு முன்னிலைப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டையொன்றின் உற்பத்தி விலை 30 ரூபாவாக காணப்படும் நிலையில் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக மாபியா பொதுமக்களிடமிருந்து சுரண்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை வழங்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை முன்வைக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் தலைவர் ஹேமாலி கொதலாவலவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முட்டை விலையை அதிகரிக்கும் நோக்கில் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டிகளுக்குள் களஞ்சியப்படுத்தி செயற்கையானதொரு முட்டை தட்டுப்பாட்டை உருவாக்க முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக மாபியா முயற்சியில் ஈடுபடுவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.