போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கான யுக்திய நடவடிக்கையானது ஒருபுறம் செயல்பாட்டில் இருக்க, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமுள்ளன.
இதனால், பொது மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை உயிர் அச்சத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
76 வன்முறை சம்பவங்களில் 83 பேர் பலி
இந்த ஆண்டு இதுவரை (2024.02.27) நாடு முழுவதும் 76 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வன்முறைச் சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் இது வரை மொத்தம் 1,180 திருட்டு சம்பவங்களும், 310 கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும் இவ்வருடத்தில் இதுவரை 20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 10 சம்பவங்கள் பாதாள குற்றவாளிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையில் நிலவும் மோதல்கள் மற்றும் போட்டிகள் காரணமாக இடம்பெற்றுள்ளன.
எவ்வாறெனினும், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.
வெள்ளவத்தை துப்பாக்கி சூடு
வெள்ளவத்தை, மரைன் டிரைவ் சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இன்று (27) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவன் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயங்களோ, உயிரிழப்புகளோ எதுவும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், தப்பியோடியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினையும் வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கி சூடுகளுக்கு மத்தியில் யுக்திய நடவடிக்கை
2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி கடந்த 21 ஆம் திகதி நிலவரப்படி 7.8 பில்லியன் ரூபா என பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த திகதி வரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டடங்களின் பெறுமதி 725 மில்லியன் ரூபா. அதற்காக செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 58,562 ஆகவும் காணப்படுகின்றது.
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,234 ஆகும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தீர்க்கமான தீர்மானம்
எந்தவித அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
எவ்வாறெனினும், யுக்திய என்ற நடவடிக்கையினால் கைதுகளும், சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், போதைப் பொருட்களை நாட்டிற்கு கொண்டுவரும் முக்கியஸ்தர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை போதைப் பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் செயற்படும் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.