குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மர்மமான முறையில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டயாலிசிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, தெரிவித்துள்ளார்.
டயாலிசிஸ் என்றால் என்ன?
சிறுநீரகங்கள் இரவும் பகலும் உழைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி, நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களிலிருந்து அதை வடிகட்டுகின்றன. கூடுதலாக, சிறுநீரகங்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் இரத்த உற்பத்தி தொடர்பான சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் வேலையைச் செய்ய முடியாதபோது, அதனை சில இயந்திரங்களின் உதவியுடன் செயற்கையாகச் செய்வதே டயாலிஸ் என கூறப்படுகிறது.
இந்நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதம தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கண்டறியப்படாத சில நோய்க்கிருமிகள் டயாலிசிஸ் பிரிவுக்குள் உட்புகுந்தமையால் இந்த மரணங்கள் சம்பவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகின்றது.