இலங்கை மத்திய வங்கியில் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் திரும்ப அறவிடப்படும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின்பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கிக்கு விரும்பியவாறு சம்பளத்தை அதிகரிக்க முடியாது. மத்திய வங்கி சம்பந்தமான சட்டம் இருக்கின்றது.
அது சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் நீக்கப்படவில்லை. பாராளுமன்ற விவகாரங்களுக்காக தனியான சட்டமூலமும் இருக்கின்றது.
எனினும் பாராளுமன்றத்தின் ஊழியர்களின் சம்பளததை அதிகரிக்கும் போது பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம்.
பாராளுமன்றத்தை ஒதுக்கி வைத்து விட்டு செயற்படுவது என்பது சுயாதீனமல்ல. உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சம்பளத்திற்கும் பாராளுமன்றமே அனுமதி வழங்குகிறது.
மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளத்தை அவர்களால் அதிகரிக்க முடியும்.
எனினும் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். மத்திய வங்கியின் அதிகாரிகள் மூடிமறைத்து செய்து ஏமாற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், எமது கட்சியின் அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்ப அறவிடுவோம்.
நாடு வங்குரோத்து அடைய போகும் விடயத்தை மத்திய வங்கியின் அதிகாரிகள் மூன்று வருடங்களாக வெளியில் கூறாது மறைத்தனர்.
பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்கவில்லை. இவர்கள் எப்படி இரட்சகர்களாக முடியும். சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின் மத்திய வங்கியின் அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் எனவும் கிரியெல்ல கூறியுள்ளார்.