மலேசியாவின் தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண் அல்ல என அந்நாட்டு சமஷ்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இது தொடர்பான ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ்மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது அல்ல என ஏற்கெனவே மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் எனவும் அது தொடர்பான விவாதங்களுக்கு வாய்ப்பில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ் மற்றும் சீன மொழி பாடசாலைகள்
இதற்கு முன்னர் மலேசிய தாய்மொழி பாடசாலைகளில் சீன மற்றும் தமிழ் மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு எதிராக மலாய் முஸ்லிம் தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர்.
எனினும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.
இந்த நிலையில், மலேசிய சமஷ்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனவும் ஏற்கனவே கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் செல்லும் எனக் கூறி மனுவை நிராகரித்துள்ளது.
மலேசியா, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே அந்நாட்டில், தமிழ் மற்றும் சீன மொழி பாடசாலைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..