அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சென்று தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் தேர்தலை ஒத்திவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளுக்கு சென்ற நாமல், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
ஆணைக்குழுவுக்கு அதிகாரம்
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய இந்த நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.
இதனால், அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய நடத்தப்படும் தேர்தலுக்கு சகல கட்சிகளும் தயாராக வேண்டியது கடமை.
ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தும் அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக யார் ஊடகங்களில் கதைகளை கூறி யோசனைகளை முன்வைத்தாலும் நாங்கள் அவசரப்படக்கூடாது. நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.
போராட்டம் நடந்த காலத்திலும் நாங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயற்படவில்லை,
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம்.
சட்டத்தை பாதுகாக்கும் கடமை
நாங்கள் எப்போதும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்த அரசியல் அமைப்பு. எதிர்காலத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்டவர், தேர்தலை ஒத்திவைக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.அரசியலில் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பாக கதைகளை கேட்டுள்ளேன்.
எனது தந்தை உட்பட அனைவரும் தேர்தல் காலங்களில் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர். எனினும் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் முறையுடனேயே நிறைவேற்று அதிகாரம் பின்னப்பட்டுள்ளது. நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
எனினும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக சென்று தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், அது தவறு.
ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டில் 45 வருடங்களுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் நபர். அவருக்கும் பெரிய ஆசிர்வாதம் ஜனநாயகம்.
ஜனநாயகத்தை மீறுகிறார் என்று அவர் எனது தந்தை மீதும் குற்றம் சுமத்தியிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.