சுகயீன விடுமுறைக்காக வழங்கப்படும் கொடுப்பனவில் வரி அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி , அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துறைமுக அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக பிரதான சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் குறித்த செய்தியில்,
பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ள பின்னணியில் துறைமுக அதிகாரசபை தனது ஊழியர்களுக்கு சுகயீன விடுமுறைக்கான கொடுப்பனவை வழங்கி வருகின்றது.
அந்த கொடுப்பனவில் வரிவிதிப்பது துறைமுக அதிகாரசபையின் தீர்மானமன்றி அரசாங்கத்தின் வரி கொள்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கொடுப்பனவு மூலம் வசூலிக்கப்படும் வரி அரசாங்கத்துக்கே அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் வரி விதிப்பு தொடர்பாக வேலைநிறுத்தம் செய்ய முடியாது என நீதிமன்ற உத்தரவு காணப்படும் நிலையில் வேலைநிறுத்தம் செய்வது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் , இன்னல்களுக்கு மத்தியில் சுகயீன விடுமுறைக்கான கொடுப்பனவு கிடைக்கப்பெறுகின்றமையை எண்ணி துறைமுக ஊழியர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.