இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் 41,000 டொலர் அபராதம்

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை பிரஜை ஒருவருக்கு 41 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் புதன்கிழமை (பெப்ரவரி 21) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி சீஷெல்ஸ் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) இடைமறித்து கைது செய்யப்பட்ட ‘ரன்குருல்லா 4’ என்ற கப்பலுக்குப் பொறுப்பானவர் மகவிட்ட லியனகே திலேஷ் என்பவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தலைமை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாம் பிடித்த மீன்கள் சீஷெல்ஸ் மீன்பிடி அதிகாரசபையால் கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டதாக இலங்கை பிரஜை நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில், அபராதம் 60 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும், இல்லையெனில் குற்றவாளி 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் 18 வெளிநாட்டு கப்பல்கள் சீஷெல்ஸின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் நுழைந்த நிலையில் இடைமறிக்கப்பட்டு அதிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் எட்டு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு இலங்கையிலிருந்து சென்ற மீன்பிடி படகு ஒன்றும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமான சீஷெல்ஸ், 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin