அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட முக்கிய தலைவர்கள் சிலரும், இளம் அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமீத்த பண்டார தென்னகோனும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர், இதனால், அவர்களின் அனுமதியின்றி ரணிலை ஆதரிப்பது தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட மாட்டார் எனக் கூறப்படுகிறது.
ரணில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை எதிர்க்கும் சில எம்.பிக்கள்
ராஜபக்ச தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தமது நிலைப்பாட்டை இதுவரை பகிரங்கமாக தெரியப்படுத்தவில்லை.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் தமது வாரிசுகளின் அரசியல் எதிர்காலம் என்பவற்றை கருதி, இறுதி நேரத்தில் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
எனினும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் இருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், அதனை மறைமுகமாக வார்த்தைகள் மூலம் பகிரங்மாக தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டப்ளியூ. டி.வீரசிங்க ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றுகையில்,
தலைமைத்துவதிற்கு நபர்களை இறக்குமதி செய்யும் தேவை பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட அனைத்து விதத்திலும் தகுதியான இளம் தலைவர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவு செய்யும் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். இதனை விடுத்து, தனிநபர்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் நபர் அல்ல.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட அழிவு மாத்திரமல்ல, மைத்திரிபால சிறிசேன தலைமையால் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்ட அழிவை போன்ற அழிவு பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை எனவும் டி.வீரசிங்க தெரிவித்தார்.