இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் (Online safety Act) குறித்து அமெரிக்கா தனது கருசனையை வெளிப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் உட்பட ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் குறித்த சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்துவதற்கும் தண்டிப்பதற்கும் அரசாங்கம் எத்தனித்துள்ளமை ஆபத்தானது என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயத்தை அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு சட்டமாக காணப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஊடகமானது மக்களின் குரலாகவும், மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களை உருவாக்கும் இயந்திரமாக காணப்படுகின்றது.
குற்றவியல் வழக்கு
ஜனநாயகத்தின் நான்காவது தூண்ணாக அடையாளப்படுத்தும் ஊடகத்துறையினை அரசாங்கம் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் குரலை நசிப்பதற்கும், உண்மைகளை வெளியில் கொண்டுவருவதை தடுப்பதற்கும் முற்படுகின்றது என்ற வாதம் நிலவிவருகின்றது.
தேசிய பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், தனிநபர் கௌரவம் என்பனவற்றிற்கு எதிராக உண்மைக்கு புறம்பாக தகவல்களை வெளியிடுவோர் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படும் ஏற்பாடுகள் உள்ளன.
அரசியலமைப்பின் உறுப்புரை 14 (1)(அ) இல் சொல்லப்பட்ட “வெளியிடுதல் உட்பட பேச்சுச் சுதந்திரமும், கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரமும்” என்ற சரத்திற்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் சவாலாக அமையக் கூடும்.
ஆட்சியாளர்களின் ஊழல், அதிகார துஸ்பிரயோகம், உள்ளிட்ட விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடக வெளியிடப்படுவதை இச்சட்டம் கட்டுப்படுத்தக்கூடும். இது மக்களுக்கு தமது ஆட்சியாளர்கள் குறித்தான மாறுபட்ட முகங்களை அறிந்து கொள்ளமுடியாது போகும்.
மேலும் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குரலாக செயற்படும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் குறித்த சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அங்கு கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது. ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு காணப்படுகின்றது.
ஜனநாயக கோட்பாடுகளை பரவலாக கைக்கொண்டுவரும் இந்தியா, மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்துள்ளது.
அங்கு சமூக வலைத்தளங்கள் வலுவான சக்தியாக காணப்படுகின்றது. பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுவருகின்றமை அண்மைக்கால அவதானிப்பாகும்.
சர்வதேச அரங்களில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் கௌரவம் என்பது உயரிய இடத்தில் காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் யுத்தகாலத்தில் பல ஊடகவியலாளர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையும், இனம்தெரியாதவர்களினால் படுகொலையும் செய்யபட்டிருந்தனர்.
தற்போது வேறுவிதமாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தினைக் கொண்டுவந்து ஊடகத்துறையினை தாம் நினைத்தால் போல் ஆட்டிப்படைக்க அரசாங்கம் எத்தனித்துள்ளது. இது இலங்கைக்கு சர்வதேச அரங்கில் அதிருப்தியையும், அழுத்தங்களையும் ஏற்படுத்தும் என்பதே அவதானிப்பாகும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
அதேவேளை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் (Anti-terrorism Bill) 03, 40, 53, மற்றும் 70 ஆகிய சரத்துக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் அத்துடன் தேவை ஏற்படின் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் செல்ல முடியும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் அங்கிகரிக்கப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் ஒன்றை ஒன்று ஒத்துச்செல்வதாக அமைந்துள்ளன.
குறிப்பாக கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இந்த நிலையிலேயே அமெரிக்கா நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு அதிருப்தி வெளியிட்டுள்ளது.