இரத்தினக்கல் வர்த்தகத்தில் மோசடி செய்து மாலைதீவுக்கு தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றி இருநூறு மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து சுற்றுலா விசாவில் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிரகாரம் அவர் நாடு கடத்தப்பட்டார்.
தம்மிடம் பெறுமதியான இரத்தினக்கற்கள் இருப்பதாகக் கூறி அவற்றை முதலீட்டுக்கு தருவதாக வாக்குறுதியளித்து சந்தேக நபர் மாணிக்க வியாபாரிகளிடம் பல கோடி ரூபாவை மோசடி செய்திருந்தார்
அது தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர் சுற்றுலா வீசாவில் மாலைதீவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.