இலங்கையைப் பொறுத்தமட்டில் இயற்கை வளங்களுக்கு குறைவற்ற நாடு.
நான்கு பக்கமும் கடல், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், நதிகள், களங்கள், வயல்நிலங்கள், விளை நிலங்கள், காடுகள், குளங்கள், என உணவு உற்பத்திக்கு ஏற்புடையதான நில, நீர்வளங்கள் காணப்படுகின்றன.
விவசாய நாடு என கூறிக்கொண்டாலும் அரிசி உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்களை அரசு இறக்குமதியே செய்து வருகின்றது.
பால் பொருட்கள், பழ வகைகள் உள்ளிட்டவையும் சிறுதானிய வகைள் என பல்வேறுபட்ட உணவுப் பொருட்களை அரசு இறக்குமதியே செய்து வருகின்றது.
கடல் உணவைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. நல்ல விலையும் கிடைக்கின்றது.
ஆனாலும் நெத்தலி, மாசி உள்ளிட்ட கருவாட்டு வகைகள், மலேசியா மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
வடகிழக்கைப் பொறுத்தமட்டில் நெல் உற்பத்தி மற்றும் மரக்கறி உற்பத்திகளும், மலையகத்தில் வாசனைத் திரவியங்கள் உட்பட மரக்கறி வகைகளும் தென்னிலங்கையில் மரக்கறி வகைள், நெல் மற்றும் பழவகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனாலும் இவை தன்னிறைவு காணப்படவில்லை
உள்நாட்டு உற்பத்தி
1971ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு இறக்குமதியினை தடை செய்திருந்தார். இதனால் நாட்டில் பாரிய பஞ்சம் ஏற்பட்டு அவரது திட்டம் தோல்வி கண்டது.
அதேபோல 2019 இல் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் இரசாயன உரத்தின் மீதான இறக்குமதி தடையினை விதித்திருந்தார். இருந்த போதிலும் அவரில் இலக்கினை எட்டமுடியாது போனது.
உண்மையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றிருக்கின்றன.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விவசாய உற்பத்தியில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
உணவு இறக்குமதி மூலம் நாட்டிலிருந்து பாரியளவான அந்நிய செலவானி வெளியே போவதினால் உள்நாட்டில் பண வீக்கம் அதிகரிக்கின்ற நிலை உள்ளது. இதன் பாதிப்பை தற்போது இலங்கை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீன் உற்பத்தி, நன்னீர் மீன் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, இறைச்சி உற்பத்தி, பால் உற்பத்தி, பழ உற்பத்தி, மரக்கறி உற்பத்தி என தேசிய தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக மக்களுக்குத் தேவையான உணவினை குறைந்த விலையில் வழங்க முடிவதுடன் வெளியேறும் அன்னிய செலவாணியை கட்டுப்படுத்த முடியும்.
தேசிய ரீதியாக பொருளாதர முன்னேற்றம்
தேசிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும். இதனால் மக்களின் வருமானத்தை அதிகரித்து குடும்பங்களின் பொருளாதார நிலைமையை உயர்த்த முடியும்.
இது நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும். ஆனாலும் ஆட்சியாளர்கள் இறக்குமதி செய்வதிலே அதிக கவனம் செலுத்துகின்றனர். காரணம் தரகுப் பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னெற்றுவதைவிடுத்து அரசியல் ரீதியாக மக்களை பிரித்து வைத்துக் கொண்டு ஆட்சி செய்துவருகின்றனர்.
இனவாத கருத்துக்களினால் மக்களை பிளவுபடுத்தி அதில் குளிர் காயும் அரசியல்வாதிகளின் சுயரூபங்கள் தற்போது வெளுக்கத் தொடங்கியுள்ளது.
மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். பொருளாதார கொள்கையினை சரியாக வகுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஆட்சியாளர்களையே மக்கள் ஆதரிக்கும் நிலையினை அடைந்துவிட்டார்கள்.
மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் ஆட்சியாளர்களின் ஏற்பட வேண்டும் இல்லையேல் மக்கள் ஆணையினைப் பெறமுடியாது பல அரசியல்வாதிகள் தோல்வியடைவார்கள் என்பதே யதார்த்தம்