இலங்கை இந்தியாவில் ஒரு அங்கம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறிய கருத்து சத்தியத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்தது என்னவென்று ஹரினுக்கு தெரியும்
“சமீபத்தில் இந்தியாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என பகிரங்கமாக கூறினார். அவர் இவ்வாறு கூறியிருப்பது தீவிரமான ஒன்று.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ‘எங்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அனைத்தையும் இந்தியாவுக்குக் கொடுப்போம்’ என்றும் புன்னகையுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது அமைச்சர் ஹரினுக்கு தெரியும். எட்கா ஒப்பந்தம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளது.
அதன் பின்னர் இந்தியர்கள் இலங்கையின் சேவைப் பொருளாதாரம், தொழில் சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இன்றி நுழைய முடியும்.
ரணில் அப்படிச் செய்யமாட்டார்
அப்படி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்த நாட்டை இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக மாற்றலாம்.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின்சார சபை மற்றும் பிற பொருளாதார மையங்கள் எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உடன்படுகின்றாரா என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சொல்ல வேண்டும்.
வேறொரு நாட்டின் ஜனாதிபதி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டால், முதலில் அவர் செய்வது அந்த அமைச்சரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்குவதுதான்.
ஆனால் எங்கள் நாட்டு ஜனாதிபதி அவ்வாறு செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.