இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக வட மாகாணத்தை மையமாகக் கொண்டு, 125 மில்லியனுக்கும் அதிகமான நிதியுடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள 73 பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக அடையாளங்காணப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும், 25 மில்லியன் ரூபாவில் பாடசாலைகளுக்கு 73,000 பாடசாலை புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
மேலும் குறித்த வேலைத்திட்டங்களுக்கு அரச நிதி பயன்படுத்தப்படாது என தெரிவித்த விமானப்படைத் தளபதி நிதியுதவி நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, விமானப்படையானது எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி முதல் 10 திகதி வரை யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளனர்.