மக்கள் விடுதலை முன்னணிக்கு எப்போதும் இந்தியாவுடனோ இந்திய மக்களுடனோ மோதலும் இருக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சில காலங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படட முடிவுகளும், அதற்கு இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய பதில்கள் மாத்திரம் எமது கட்சியின் விமர்சனங்களுக்கு உள்ளனது.
சர்வதேச உறவுகள் என்பது உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வைக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள்தோ, அடிப்பணிவதோ அல்ல.
இதனால், எதிர்காலத்தில் இந்திய அரசிடம் இருந்து பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக எமது நாட்டுக்கு பாதிப்பான விடயங்கள் வருமாயின் அவற்றை விமர்சிக்கவும் அவற்றை நிராகரிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயங்க போவதில்லை. சர்வதேச உறவுகள் என்பது இதுதான்.
இன்னுமொரு நாடு எமது நாடு தொடர்பாக முன்வைக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அடிப்பணியக்கூடாது. பேச்சுவார்த்தையில் இணங்குவது, இணங்க மறுப்பது என்பன அதில் அடங்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் கடுமையான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளை கொண்டு செயற்பட்டு வந்த கட்சி. 88ஆம் ஆண்டுகளில் இந்திய பரவல்வாதத்திற்கு எதிராக பெரிய போராட்டங்களை அந்த கட்சி நடத்தியது. இந்திய திரைப்படங்கள் உட்பட இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என கடும் பிரசாரங்களை முன்னெடுத்து.
அந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்த இந்திய அமைதிக்காக்கும் படையினரை குரங்கு படையினர் என்று அந்த கட்சி விமர்சித்தது. மேலும் இலங்கைக்குள் இந்தியா பொருளாதார ரீதியான ஊடுருவலை மேற்கொண்டு வருகிறது எனவும் மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியது.
இந்த நிலையில், இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்தியா அவர் தலைமையிலான குழுவினரை நாட்டுக்கு அழைத்துள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் இந்திய விஜயமானது அவர்களின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாறுதலை காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டிருந்த இந்திய தொடர்பான எதிர்ப்பு கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சர்வதேச அரசியல் நிலைமைகளுக்கு அமைய செயற்படும் கொள்கைகளை அந்த கட்சி உள்வாங்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.