அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த கஜேந்திரகுமார்

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ற 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் பிரதிநிதிகளான விலே நிக்கல், டொபரஞ் ரோஸ், ஜெமி ரஸ்கின் மற்றும் டனி கே டேவிஸ் ஆகியோரை சந்தித்த கஜேந்திரகுமார் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை விவகாரம் தொடர்பாக உரையாடியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட கேஜேந்திரகுமார் தாம் சந்தித்த காங்கிரஸ் பிரதிநிதிகள் ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்கள் எனவும் இலங்கைத் தீவில் சீன செல்வாக்கை கட்டுப்படுத்த சிங்கள கட்சிகளுடன் மாத்திரம் பேசுவதால் பயனில்லை எனவும் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை அல்லது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் அமேரிக்கா இரகசிய நகர்வுகளை கையாண்டு வரும் நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்த விவகாரத்தில் இந்தியா சொல்வதைக் கேட்டு செயற்படும் அமேரிக்கா கொழும்பில் தமக்கு சாதமான அரசாங்கமொன்று இருப்பதையே விரும்புகின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் அமெரிக்க, இந்திய அரசுகள் இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை பாதுகாக்கும் சிங்கள அரசியல் கட்சிகளுடன் மாத்திரம் உரையாடி வருகின்றன.

தமது புவிசார் அரசியல் நோக்கில் இவ்வாறான அணுகுமுறைகளை கையாளும் அமெரிக்க, இந்திய அரசுகள் ஈழத்தமிழர் அரசியல் விடுதலை விவகாரத்தை 13 ஆவது திருத்தச்சட்டத்துடன் முடக்க முற்படுகின்றன.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்திருக்கின்றார். ரணில் விக்ரமசிக்கவை அல்லது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் முயற்சிக்கு மறைமுக ஒத்துழைப்பை வழங்குகின்றாரா? அல்லது ஈழத்தமிழர் விவகாரம் பற்றித்தான் பேசினாரா என்பது பற்றிய விமர்சனங்கள் எழுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தாமல் தேர்தலையே முற்றாக பகிஷ்கரிக்க வேண்டுமென தமித்தேசிய மக்கள் முன்னணி கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin